சக்திவிளக்கம்

சக்திவிளக்கம்

bookmark


ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை 
அன்னை எனப்பணிதல் ஆக்கம், 
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத் 
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். 

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த 
மூன்று புவியுமதன் ஆட்டம்! 
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள் 
காளி நடமுலகக் கூட்டம். 

காலை இளவெயிலின் காட்சி - அவள் 
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி, 
நீல விசும்பினிடை இரவில் - சுடர் 
நேமி யனைத்துமவள் ஆட்சி. 

நாரண னென்று பழவேதம் - சொல்லும் 
நாயகன் சக்திதிருப் பாதம், 
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு 
செல்வம் அறிவு சிவபோதம். 

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள் 
அன்னை யருள் பெறுதல் முக்தி, 
மீதி உயிரிருக்கும்போதே - அதை 
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. 

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப் 
பாரதி யன்னையருள் மேவி 
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல 
கற்றலில் லாதவனோர் பாவி. 

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த 
மூலப் பொருள் ஒளியின் குன்று 
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த 
நேரமும் போற்று சக்தி என்று.