நூலமைப்பு
காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
காண்டங்கள்
- புகார்க் காண்டம்
- மதுரைக் காண்டம்
- வஞ்சிக் காண்டம்
