மிதிலைக் காட்சிப் படலம் - 635
நிலாக்கற்றை பரவுதல் (635-637)
635.
புள்ளிக் குறி இட்டென ஒள் மீன்
பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில். சிறந்த இருட் பிழம்பை
நக்கி நிமிரும் நிலாக் கற்றை-
கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?
கீழ்ப்பால் திசையின்மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின்
பாளை போன்று விரிந்துளதால்.
புள்ளிக்குறி இட்டு என - புள்ளிகளை அடையாளமாக
இட்டாற்போல; ஒள்மீன் பூத்த - ஒளிமிக்க நட்சத்திரங்கள்
விளங்குகின்ற; வானம் - ஆகாயத்திலே; பொலி - விளங்கும்; கங்குல்
நள்ளில் - இரவின் நடுப்பொழுதில்; சிறந்த இருள் பிழம்பை
- திரண்ட இருள் கூட்டத்தை; நக்கி நிமிரும் - உண்டு சிறக்கின்ற;
நிலாக் கற்றை - நிலாத் தொகுதியானது; கீழ்ப் பால் திசையின் -
கிழக்குத் திக்கிலே; மிசை வைத்த - மேலிடமாக வைக்கப்பட்ட;
வெள்ளிக் கும்பத்து - வெள்ளிமயமான பூரணகும்பத்தின்
பக்கத்திலுள்ள; இளங் கமுகின் பாளை போன்று - இளங் கமுகின்
பாளையை ஒத்து; விரிந்துளது - பரவியுள்ளது; கிள்ளைக் கிளவிக்கு
- (இது) கிளிமொழியாகிய சீதைக்கு; என் ஆம் கொல் - எத்தகையது
ஆகுமோ?
தற்குறிப்பேற்றவணி. சந்திரனது நிலாக் கற்றை வெள்ளிக்
கும்பத்தில் நாட்டிய வெண்பாளைக் கமுகு போன்றது என்றார்.
வெள்ளிக் கும்பம் - சந்திரனுக்கும். கமுகம் பாளை நிலாக்
கற்றைக்கும் ஒப்பு. பூரண கும்பம் வைத்தலும். விரிந்த பாளைகளை
அதில் அமைத்தலும் மலங்கலமாகும். 72
