மிதிலைக் காட்சிப் படலம் - 640

bookmark

கலி விருத்தம்
 
640.

‘கொடியை அல்லை: நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும். வந்தனை.  
பிடியின் மென்நடைப் பெண்ணொடு; என்றால். எனைச்
சுடுதியோ? - கடல் தோன்றிய திங்களே!
 
கடல் தோன்றிய- கடலிலிருந்து உதித்த; திங்களே - சந்திரனே!;
நீ கொடியை அல்லை  - நீ  இயற்கையில்  கொடியவன்  அல்லன்;
யாரையும் கொல்கிலாய்  -  (அது  எவ்வாறு  எனில்)  உலகத்தில்
எவரையும்  கொல்கின்றாய் இல்லை; வடு இல் - (தவிர நீ) குற்றமற்ற;
இன்   அமுதத்தொடும்  -  இனிய    அமுதத்துடனும்;  பிடியின்
மென்னடை - பெண்யானை  போன்ற நடையுடைய; பெண்ணொடும்
- திருமகளுடனும்; வந்தனை  - பிறந்தாய்;  என்றால்  -  இவ்வாறு
இருப்பதால்; எனைச் சுடுதியோ - என்னைச்சுடுவதும் தக்கதோ?   

‘சந்திரனே!     நீ     எல்லோரையும்    கொல்லும்  தன்மையை
இயற்கையாகப்    பெற்றாய்    இல்லை;   ?ஏனெனில்   கடலினின்று
தோன்றியவன்  ஆதலால்  இயல்பாகவே  குளிர்ச்சி  பொருந்தியவன்;
அமுதத்தோடு   பிறந்தவனாதலால்   பெண்ணிடம்  அன்பு  வைக்கத்
தக்கவன்.  அவ்வாறு  இருக்க  நீ பெண்ணாகிய என்னை  வருத்துவது
முறையோ’ என்கிறாள் சீதை.                                77