மிதிலைக் காட்சிப் படலம் - 648

bookmark

வணங்கிய இராமனை வாழ்த்திச் சதானந்த
முனிவன் கோசிகன் பக்கம் சார்தல்

648.

வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும். சென்று எதிர்.
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து. கோசிகன்தன் மருங்கு எய்தினான்.
 
வந்து  எதிர்ந்த  -  (இங்ஙனம்) வந்து  தோன்றிய;  முனிவனை
- அம் முனிவனை; வள்ளலும் - வரையாது அருள் செய்யும் இராமனும்;
சிந்தை  ஆர  -  மனம்  மகிழ;  வணங்கலும்  -  அடி   வீழ்ந்து
வணங்கியபின்;   அந்தம்   இல்   குணத்தான்  -    எல்லையற்ற
நற்குணங்கள் வாய்ந்த அச்  சதானந்த முனிவன்;  ஆசிகள்   நெடிது
தந்து - (இராமனுக்கு)  ஆசி  மொழிகள்  மிகுதியும்  கூறி;   சென்று
எதிர் -  (தன்னை)   எதிர்கொண்ட;   கோசிகன்  தன் மருங்கு -
 விசுவாமித்திரன் அருகில்; எய்தினான் - அடைந்தான்.  

வள்ளல்: அகலிகைக்கு அருள் செய்தமை கருதியது. 85