யோகசக்தி

யோகசக்தி

bookmark

விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள் 
  வீரை சக்தி நினதருளே - என்றன் 
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு 
  கசிந்து கசிந்து கசிந்துருகி - நான் 
பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும் 
  பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக் 
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி 
  வில்லா தகிலம் அளிப்பாயோ? 

நீயே சரணமென்று கூவி - என்றன் 
  நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி 
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந் 
  தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு 
வாயே என்றுபணிந் தேத்திப் - பல 
  வாறா நினது புகழ்பாடி - வாய் 
ஓயே னாவதுண ராயோ? - நின 
  துண்மை தவறுவதோ அழகோ? 

காளீ வலியசா முண்டி - ஓங் 
  காரத் தலைவியென் னிராணி - பல 
நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம் 
  நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த் 
தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது 
  தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம் 
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு 
  நீலியென் னியல்பறி யாயோ? 

தேடிச் சோறுநிதந் தின்று - பல 
  சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் 
வாடித் துன்பமிக உழன்று - பிறர் 
  வாடப் பலசெயல்கள் செய்து - நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் 
  கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான் 
  வீழ்வே னென்று நினைத் தாயோ? 

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை 
  நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் 
  மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி 
என்னைப் புதியவுயி ராக்கி - எனக் 
  கேதுங் கவலையறச் செய்து - மதி 
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் 
  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் 

தோளை வலியுடைய தாக்கி - உடற் 
  சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி 
வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு 
  மாறா வுடலுறுதி தந்து - சுடர் 
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி 
  நண்ணித் திகழுமுகந் தந்து - மத 
வேளை வெல்லுமுறைகூறித் - தவ 
  மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி 
  யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில் 
பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில் 
  பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை 
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக 
  நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல 
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான் 
  பாடத் திறனடைதல் வேண்டும். 

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக் 
  கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும் 
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப் 
  போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை 
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என 
  விந்தை தோன்றிட இந்நாட்டை - நான் 
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி 
  சூழும் வீரமறி வாண்மை. 

கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல் 
  கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை 
நாடும் படிக்குவினை செய்து - இந்த 
  நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் - கலி 
சாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி 
  தாயே! உனக்கரிய துண்டோ? - மதி 
மூடும் பொய்மையிரு ளெல்லாம் - எனை 
  முற்றும் விட்டகல வேண்டும். 

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் - புலை 
  அச்சம் போயொழிதல் வேண்டும் - பல 
பையச் சொல்லுவதிங் கென்னே! - முன்னைப் 
  பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை 
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி 
  உன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி 
வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை 
  வாழி! நின்ன தருள் வாழி! 

ஓம் காளி! வலிய சாமுண்டீ! 
ஓங்காரத் தலைவி! என் இராணி!