வண்ணதாசன்
வாழ்க்கை வரலாறு வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் என்பதாகும். இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி.க. சிவசங்கரன் ஆவார். இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம்இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ஒரு சிறு இசை என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இவர், சின்ன விஷயங்களின் மனிதன், மனுஷா மனுஷா, ஒரு சிறு இசை, தமிழ் இன்பம், நொடி நேர அரைவட்டம், பெயர் தெரியாமல் ஒரு பறவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
