வ. வே. சுப்பிரமணியம் ஐயர்
வாழ்க்கை வரலாறு வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.கல்வி வ. வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.லண்டனில் அரசியல் போராட்டம் இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார். அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார். மண்டயம் ஶ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா.போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார்.1922ல் சேரன் மாதேவியில் தமிழுக்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.தம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன்று அம்பாசமுத்திரம் அருவியை காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வ.வே.சு.ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு.ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது நினவாக சேரன்மகாதேவியில் வ.வே.சு.ஐயர் மாணவர் விடுதி உள்ளது.
