மிதிலைக் காட்சிப் படலம் - 635

bookmark

நிலாக்கற்றை பரவுதல் (635-637)

635.

புள்ளிக் குறி இட்டென ஒள் மீன்
   பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில். சிறந்த இருட் பிழம்பை
   நக்கி நிமிரும் நிலாக் கற்றை-
கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?
   கீழ்ப்பால் திசையின்மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின்
   பாளை போன்று விரிந்துளதால்.
 
புள்ளிக்குறி     இட்டு  என  -  புள்ளிகளை   அடையாளமாக
இட்டாற்போல;  ஒள்மீன்   பூத்த   -   ஒளிமிக்க   நட்சத்திரங்கள்
விளங்குகின்ற; வானம் - ஆகாயத்திலே; பொலி - விளங்கும்; கங்குல்
நள்ளில்  -  இரவின்  நடுப்பொழுதில்;  சிறந்த  இருள்  பிழம்பை
- திரண்ட இருள் கூட்டத்தை; நக்கி  நிமிரும் - உண்டு   சிறக்கின்ற;
நிலாக் கற்றை - நிலாத் தொகுதியானது; கீழ்ப்  பால் திசையின் -
கிழக்குத்  திக்கிலே;  மிசை  வைத்த -  மேலிடமாக  வைக்கப்பட்ட;
வெள்ளிக்    கும்பத்து   -  வெள்ளிமயமான     பூரணகும்பத்தின்
பக்கத்திலுள்ள; இளங்  கமுகின்  பாளை போன்று - இளங் கமுகின்
பாளையை ஒத்து; விரிந்துளது - பரவியுள்ளது; கிள்ளைக் கிளவிக்கு
- (இது) கிளிமொழியாகிய சீதைக்கு; என் ஆம் கொல் - எத்தகையது
ஆகுமோ? 

தற்குறிப்பேற்றவணி.     சந்திரனது  நிலாக்  கற்றை    வெள்ளிக்
கும்பத்தில்   நாட்டிய   வெண்பாளைக்  கமுகு  போன்றது  என்றார்.
வெள்ளிக்   கும்பம்   -   சந்திரனுக்கும்.   கமுகம்  பாளை  நிலாக்
கற்றைக்கும்  ஒப்பு.  பூரண கும்பம் வைத்தலும். விரிந்த  பாளைகளை
அதில் அமைத்தலும் மலங்கலமாகும்.                         72