மிதிலைக் காட்சிப் படலம் - 637
637.
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த
நெடு வெண் திங்கள் எனும் தச்சன்.
மீ. தன் கரங்கள் அவை பரப்பி.
மிகுவெண் நிலவு ஆம் வெண்சுதையால்
‘காத்த கண்ணன் மணி உந்திக்
கமல நாளத்திடைப் பண்டு
பூத்த அண்டம் பழையது’ என்று
புதுக்குவானும் போன்றுளதால்.
நீத்தம் அதனில் - கடலின் வெள்ளத்திலே; முளைத்து எழுந்த
- உதித்து மேலெழுந்த; நெடுவெண் திங்கள் எனும் - மிக்க
வெண்ணிறமுள்ள சந்திரன் என்கிற; தச்சன் - சிறந்த சிற்பி; காத்த
கண்ணன் - காத்தளிக்கும் திருமாலின்; மணி உந்திக் கமலம்
- அழகிய உந்தித் தாமரையின்; நாளத்திடை - நாளத்தின் இடமாக;
பண்டு பூத்த - முன்பு தோன்றின; அண்டம் - அண்ட கோளமாகிய
வீடு; பழையது என்று - (இப்பொழுது) பழையதாகி விட்டதென்று
கருதி; தன் கரங்கள் அவை - தன் கதிர்களான கைகளை; மீ பரப்பி
- மேலே பரப்பி; மிகு வெள் நிலவு ஆம் - மிக்க வெண்ணிலவான;
வெண்சுதையால்- வெள்ளைச் சுண்ணாம்புச் சாந்தால்; புதுக்குவானும்
- அதனைப் புதுப்பிப்பவன்; போன்று உளது - போன்றும்
(உலகெங்கும்) நிலாக் கற்றை பரவி இருந்தது.
பழுதடைந்த வீட்டை முழுவெண் சாந்து பூசிப் புதுப்பித்தலும்
தச்சன் தொழிலாற்று. வெண் சாந்து மங்கல வண்ணமாதலின் மங்கல
நாளுக்கு முன் அவனிடமிருந்து பூத்த அண்ட கோளமாகிய வீடு
வெள்ளையடித்துப் புதுப்பிக்கப்ட்டது போலும். தற்குறிப்பேற்றவணி.
புதுக்குவான் - தொழிற் பெயர். நெடுந்தச்சன்: திருமாலினால்
படைக்கப்பட்ட அண்ட கோளம் முழுவதையும் ஒரு வீடு போலக்
கொண்டு தான் ஒருவனே புதிதாக ஆக்கவல்ல ஆற்றலுடைய சிற்பி
எனலாம். 74
