மிதிலைக் காட்சிப் படலம் - 640
கலி விருத்தம்
640.
‘கொடியை அல்லை: நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும். வந்தனை.
பிடியின் மென்நடைப் பெண்ணொடு; என்றால். எனைச்
சுடுதியோ? - கடல் தோன்றிய திங்களே!
கடல் தோன்றிய- கடலிலிருந்து உதித்த; திங்களே - சந்திரனே!;
நீ கொடியை அல்லை - நீ இயற்கையில் கொடியவன் அல்லன்;
யாரையும் கொல்கிலாய் - (அது எவ்வாறு எனில்) உலகத்தில்
எவரையும் கொல்கின்றாய் இல்லை; வடு இல் - (தவிர நீ) குற்றமற்ற;
இன் அமுதத்தொடும் - இனிய அமுதத்துடனும்; பிடியின்
மென்னடை - பெண்யானை போன்ற நடையுடைய; பெண்ணொடும்
- திருமகளுடனும்; வந்தனை - பிறந்தாய்; என்றால் - இவ்வாறு
இருப்பதால்; எனைச் சுடுதியோ - என்னைச்சுடுவதும் தக்கதோ?
‘சந்திரனே! நீ எல்லோரையும் கொல்லும் தன்மையை
இயற்கையாகப் பெற்றாய் இல்லை; ?ஏனெனில் கடலினின்று
தோன்றியவன் ஆதலால் இயல்பாகவே குளிர்ச்சி பொருந்தியவன்;
அமுதத்தோடு பிறந்தவனாதலால் பெண்ணிடம் அன்பு வைக்கத்
தக்கவன். அவ்வாறு இருக்க நீ பெண்ணாகிய என்னை வருத்துவது
முறையோ’ என்கிறாள் சீதை. 77
