மிதிலைக் காட்சிப் படலம் - 643

bookmark

643.

வாச மென் கலவைக் களி வாரி. மேல்
பூச பூசப் புலர்ந்து புழுங்கினாள்;
வீச வீச வெதும்பினள். மென் முலை.--
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ?
 
மென்முலை   - மென்மையான தனங்களையுடைய சீதை; வாசம்
மெல் -  மணமும் மென்மையும்  வாய்ந்த; கலவைக்களி - கலவைச்
சந்தனக்குழம்பை; வாரி  - அள்ளிக்கொண்டு; மேல்  பூசப்  பூச -
(தோழிமார்) தன்னுடலில் பூசுந்தோறும்; புலர்ந்து - உடம்பு வெதும்பி;
புழுங்கினள் - தவித்தாள்; வீச வீச வெதும்பினள் - (ஆல வட்டம்
முதலியவற்றால்)  வீசுந்தோறும் (சீதை) வெப்பம் அடைந்தாள்; ஆசை
நோய்க்கு  -  காம  நோயைத்  தீர்க்க;  மருந்தும்   உண்டாம் -
கொல் மருந்தும் உலகில் உண்டோ?  

காம     வேதனையால் வாடும் சீதையின் வெப்பத்தைத் தணிக்கத்
தோழியர்  செய்யும் பரிகாரம் யாவும் அவளுக்கு மேலும் வெப்பத்தை
வளர்த்தன  என்பதாம்.  ஆசை  நோய்க்கு  வேறு பரிகாரம் இல்லை:
‘மருந்து பிறிதில்லை  யானுற்ற    நோய்க்கே’   (நற்.80)  மென்முலை:
அன்மொழித்தொகை. வேற்றுப் பொருள் வைப்பணி.             80