மிதிலைக் காட்சிப் படலம் - 651
சதானந்தருக்கு இராமனது பெருமையைக்
கௌசிகர் கூறுதல்
651.
‘வடித்த மாதவ! கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெங் குரல் தாடகை யாக்கையும்..
அடுத்து என் வேள்வியும். நின் அன்னை சாபமும்.
முடித்து. என் நெஞ்சத்து இடர் முடித்தான்’ என்றான்.
வடித்த மாதவ - தெளிந்து செய்த பெரிய தவமுனிவரே; கேட்டி -
(நான்கூறுவதைக்) கேட்பீராக; இவ்வள்ளல்தான் - இந்த வள்ளலான
இராமன்; இடித்த வெம்குரல் - இடிபோன்ற குரலுடைய; தாடகை
யாக்கையும் - தாடகை என்னும் அரக்கியின் உடம்பையும்; என்
வேள்வியும் - என் யாகத்தையும்; நின் அன்னை சாபமும் - உன்
தாயான அகலிகையின் சாபத்தையும்; அடுத்து முடித்து - ஒன்றன்பின்
ஒன்றாக முடித்து; என் நெஞ்சத்து - என் நெஞ்சில் கிடந்த;
இடர்முடித்தான் - துயரங்களைத் தீர்த்து வைத்தவன் ஆவான்.
மூவகை முடித்தல்களைச் செய்தவன் இராமன்: 1. தாடகையைக்
கொன்று முடித்தல். 2. வேள்வியை முடித்தது. 3. அகலிகையின் சாபம்
ஒழித்து நீக்கியது. முடித்தல் என்ற சொல் பல பொருளில் வந்தது.
சொற் பின்வரு நிலையணி. 88
