மிதிலைக் காட்சிப் படலம் - 655

bookmark

கோசிகன் வசிட்டன் உறைவிடத்தை அடைதல்

வேட்டைமேல் காடு சென்ற அரசன் வசிட்டனைச் சார்தல்
 
655.

‘அரசின் வைகி அறனின் அமைந்துழி.
விரசு கானிடைச் சென்றனன். வேட்டைமேல்;
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனாம்
பரசு வானவன்பால் அணைந்தான்அரோ.
 
அறனின்    அமைந்துழி-  அறநெறியிலே  அமைந்து;  அரசின்
வைகி - (இங்ஙனம் இவன்)  அரசாட்சியிலே  பொருந்தி   வருங்கால்;
வேட்டைமேல்  -  (ஒரு  நாள்)  வேட்டையின்  நிமித்தம்;   விரசு
கானிடைச்   சென்றனன்   -   அடர்ந்த  காட்டினிடையே  சென்று;
உரைசெய் -  சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற; மா தவத்து ஓங்கல் -
தவத்திலே  மேம்பட்ட;  வசிட்டன்  ஆம்  -  வசிட்டமுனிவனாகிய;
பரசுவான்  -   யாவராலும்  துதிக்கப்படுகிற;  அவன்பால் -  அந்த
முனிவனிடத்தில்; அணைந்தான் - சேர்ந்தான்.                 92