மிதிலைக் காட்சிப் படலம் - 659

bookmark

659.

‘’நிற்கு இது தகுவது அன்றால்.
   நீடு அருஞ் சுரபிதன்னை
எற்கு அருள்’’ என்றலோடும்.
   இயம்பலன் யாதும்; பின்னர்
‘’வற்கலை உடையென் யானோ
   வழங்கலென்; வருவதுஆகின்.
கொற் கொள்வேல் உழவ!நீயே
   கொண்டு அகல்க!’’ என்று கூற.
 
நிற்கு-உனக்கு; இது - இப் பசு; தகுவது அன்று - தகுதியுடையது
அன்று; ஆல் -  (அதனால்);  நீடு  அரும்  -  சிறப்பு மிக்க; சுரபி
தன்னை  -  இக்   காமதேனுவை;   எற்கு   அருள்  -  எனக்குக
கொடுத்தருளுக;  என்றலோடும்   -  (என்று  கௌசிகன்)  சொன்ன
அளவில்;  யாதும் இயம்பலம்  -  வசிட்டன் (சிறிது நேரம்) ஒன்றும்
கூறாதவனாய்; பின்னர்  -  பின்பு; கொன்  கொள்  - (பகைவர்க்கு)
அம்சம்தரும்; வேல்  உழவ  -  வேற்படையுள்ள  அரசே; வற்கலை
உடையென் -  மரவுரியை ஆடையாக உடைய முனிவனான; யானோ
வழங்கலென் -  நானோ  (இதனை  உமக்குக்)  கொடுக்கும்  உரிமை
உடையவன்  அல்லன்;  வருவது  ஆகின்  -  (அப்  பசு உம்மிடம்)
வருவதனால்; நீயே கொண்டு - நீரே அழைத்துக் கொண்டு;  அகல்க
- செல்வீராக; என்று கூற - என்று கூறிய அளவில்.

வற்கலை  உடையென் யானோ வழங்கலென் - முனிவர்க்கு அரசர்
பசு  முதலிய  பொருள்களைக் கொடுத்திடுவது மரபேயொழிய முனிவர்
அரசர்க்குக்  கோதானம்  செய்வது  தக்கது  அன்று  என்ற கருத்தும்
குறிப்பாக   உணரப்படுகிறது.   சொல்   கொள்வேல்   -  கொலைத்
தொழிலைக்   கொண்ட   வேல்.   கொல்லனது   உலைக்  களத்தில்
வடிக்கப்பட்ட   வேல்.   வேல்   உழவன்:   பகைவரது  உடம்பாகிய
விளைநிலத்தைத்  தனது  வேலாகிய  கலப்பையைக்  கொண்டு உழுது
போராகிய பயிரை வளர்த்து வெற்றியாகிய பயனை விளை   விப்பவன்.
கொன்:   அச்சம்   (தொல்    இடை    -6)   யானோ:   ஒ-இழிவு
சிறப்பு. உருவக அணி.                                    96