மிதிலைக் காட்சிப் படலம் - 636

bookmark

636.

வண்ண மாலைக் கைபரப்பி.
   உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணித் தண் மதியத்து
   உதயத்து எழுந்த நிலாக் கற்றை.-
விண்ணும் மண்ணும் திசைஅனைத்தும்
   விழுங்கிக்கொண்ட. விரி நல்நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன்
   புகழ்சூபால் - எங்கும் பரந்துளதால்.
 
வண்ணம்  மாலை-  நிறமுள்ள ஒளிமிக்க மாலைப்  பொழுதாகிய;
கை பரப்பி - (தனது) கையை விரித்து நீட்டி; உலகை    வளைந்த-
உலகினைச்  சூழ்ந்துள்ள; இருள் எல்லாம்  - இருள்  முழுவதையும்;
உண்ண  எண்ணி  -  உண்ணுவதற்கு  எண்ணி;  தன்   மதியத்து
உதயத்து  -  குளிர்ந்த  சந்திரனின்  உதய  காலத்தில்;  எழுந்த -
வெளிப்பட்ட; நிலாக் கற்றை -  நிலாத்  தொகுதியானது; விண்ணும்
மண்ணும் - விண்ணுலகமும்   மண்ணுலகமும்; திசை   அனைத்தும்
- எல்லாத் திசைகளுமாகிய உலகம் முழுவதையும்;  வீழுங்கிகொண்ட
- (தன்னுடையதாக்கி)  விழுங்கிய; விரி  நல்  நீர்  - பரவிச் சிறந்த
நீர்  வளமுள்ள;  பண்ணை -  கழனிகள்  வாய்ந்த;  வெண்ணெய்ச்
சடையன் தன்  -  திருவெண்ணெய்  நல்லூரில் வாழ்கிற  சடையப்ப
வள்ளலின்; புகழ்போல் -  புகழைப்போல; எங்கும்  பரந்துளது  -
எங்கும் பரவியுள்ளது.  

இருள்     தொகுதியாகிய அரக்கர் கூட்டம் மாலைக்  காலமாகிய
கையைப்பரப்பி  உலகம்  முழுவதையும் வளைத்துக் கொண்டது. அவ்
விருளை  ஒழிக்கக்  கருதிய  சந்திரனின்  நிலாக் கற்றையாகிய  படை
சடையன்   புகழ்   போல   எங்கும்   பரவியது   என்றார்.  புகழை
வெண்ணிறம்   உடையதாக   வருணித்தல்   கவி  மரபு.  சடையப்ப
வள்ளல்-சோழ நாட்டு வெண்ணெய் நல்லூர்த் தலைவர்.          73