மிதிலைக் காட்சிப் படலம் - 644
மலர்ப்படுக்கை வெம்மையால் கரிந்துபோதல்
644.
தாயரின் பரி சேடியர். தாது உகு
வீ. அரித் தளிர். மெல்அணை. மேனியில்
காய் எரிக் கரியக் கரிய. கொணர்ந்து.
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார்.
மேனியில் - (சீதையின்) திருமேனியில்; காய் - எரியும்; எரி -
காமத் தீயினால்; தாது உகு வீ - மகரந்தப் பொடிகள் சிந்தப்பெற்ற
மலர்களைக் கொண்டும்; அரித்தளிர் - மெல்லிய
தளிர்களைக்கொண்டும்; மெல் அணை - (அமைக்கப்பட்ட) மெல்லிய
அவளுடைய படுக்கை மெத்தைகள்; கரியக் கரிய -
கருகிக்கொண்டேயிருக்க; தாயரின் பரி சேடியர் - தன்னைப் பெற்ற
தாயரைவிட மிக்க அன்பு காட்டும் (சீதையின்) தோழியர்; ஆயிரத்தின்
இரட்டி - இரண்டாயிரம் படுக்கை மெத்தைகளை; கெணர்ந்து -
(ஒன்றன்பின் ஒன்றாகக்) கொண்டு வந்து; அடுக்கினார் - மேன்மேல்
அடுக்கி அமைத்தார்கள்.
தோழியர் அன்போடு படுக்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே
இருந்தார்கள். ஆயிரத்து இரட்டி மிகப்பல. அரித்தளிர் அடர்த்தியை
உடைய தளிர். பொன்னிறமான தளிர். ஒளியுள்ள தளிர். 81
