மிதிலைக் காட்சிப் படலம் - 656
வசிட்டன் ஆணைப்படி காமதேனு விருந்தளித்தல்
அறுசீர் விருத்தம்
656.
‘அருந்ததி கணவன் வேந்தற்கு
அருங் கடன் முறையின் ஆற்றி.
‘’இருந்தருள் தருதி’’ என்ன.
இருந்துழி. ‘’இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென்’’ என்னா.
சுரபியை விளித்து. ‘’நீயே
சுரந்தருள் அமிர்தம்’’ என்ன.
அருள்மறை சுரந்தது அன்றே.
அருந்ததி கணவன்- (அப்பொழுது) அருந்ததி கணவனான
வசிட்டமுனிவன்; வேந்தற்கு - (இந்தக்) கௌசிக முனிவனுக்கு; அருங்
கடன் - செய்வதற்கு அரிய உபசாரக் கடமைகளை; முறையின் ஆற்றி
- முறை தவறாமல் செய்து; இருந்து - (நீர் இங்கே) தங்கியிருந்து
செல்ல; அருள் தருதி என்ன - கருணை செய்க என்று
கேட்டுக்கொள்ள; இருந்த உழி - (கௌசிகன் அவ்வாறே அவ்விடம்)
இருந்தபொழுது; இனி நிற்கு - இனி உமக்கு; விருந்து இனிது
-விருந்திட்டு இனிதாக; அமைப்பென் என்னா - உபசரிப்பேன் என்று
கூறி; சுரபியை விளித்து - (உடனே) காம தேனுவை அழைத்து; நீயே
அமிர்தம் சுரந்து அருள் என்ன - அமுதம் (போன்ற உணவு
முதலியவற்றை) நீயே இவருக்கு இப்போது சுரந்து அளிப்பாயாக என்று
நியமிக்க; அருள் முறை - (அத் தெய்வப் பசு) வசிட்டன்
அருளியபடியே; அன்றே - அப்பொழுதே (உணவு முதலிய உபசாரப்
பண்டங்களை); சுரந்தது - சுரந்து அளித்தது.
அருந்ததி: வசிட்டரின் மனைவி; கற்பு நிலையில் மிக மேம்
பட்டவள்; கற்புத் தன்மைக்கு இவளையே உவமையாகக் கொள்வர்.
சுரபி - காமதேனு - இது பாற்கடலைக் கடைந்த காலத்து
அதனினின்று தோன்றியது; வேண்டுகின்றவர் வேண்டு பொருள்
அனைத்தையும் உடனே சுரந்து அளிப்பது. 93
