மிதிலைக் காட்சிப் படலம் - 638
தாமரை குவிதலும் ஆம்பல் அலர்தலும்
638.
விரை செய் கமலப் பெரும்போது.
விரும்பிப் புகுந்த திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய.
கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்;
உரை செய் திகிரிதனை உருட்டி.
ஒரு கோல் ஓச்சி. உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க. தலை எடுத்த
குறும்பு போன்றது. அரக்கு ஆம்பல்.
(இவ்வாறு சந்திரன் உதித்தபொழுது) விரைசெய்- மணங்கமழும்;
கமலப்பெரும்பொது - பெரிய தாமரை மலர்; விரும்பிப் புகுந்த
- விருப்பத்தோடு தன்னிடம் புகுந்த; திருவினொடும் - திருமகளுடன்;
குரை செய் - ஒலிக்கும்; வண்டின் குழாம் இரிய - வண்டுகளின்
கூட்டமும் (தன்னை விட்டு) நீங்கி போகும்படி; கூம்பி - இதழ்
குவிந்து; சாம்பி - வாடி; குவிந்ததுளது - மூடிக்கொண்டுள்ளது;
அரக்கு ஆம்பல் - செவ்வாம்பல் பூவானது; உரைசெய்
திகிரிதனை - புகழப்படும் (ஆணைச்) சக்கரத்தை (எங்கும்
தடையில்லாதபடி); உருட்டி - சுழலச் செய்து; ஒரு கோல்ஓச்சி -
ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி; உலகு ஆண்ட - உலகமுழுதும்
ஆட்சி செய்து வந்த; அரசன் ஒதுங்க - அரசன் ஒழிந்த
அளவில்; தலையெடுத்த - (வீறுடன்) தலையெடுத்த; குறும்பு -
குறுநில மன்னனை; போன்றது - போல மலர்ந்தது.
கதிரவன் மறைந்த அளவில் தாமரை குவிதலும். ஆம்பல்
மலர்தலுமாகிய இயல்பு வருணிக்கப்பட்டது. ஒற்றைத் தேராழியை
உருட்டி ஒப்பற்ற கதிரை வீசி உலகம் முழுவதும் ஆண்ட சூரியன்
மறைந்தது. அதனால் ஆம்பல் பூக்கள் மலர்ந்தன. ‘சீர் அரசாண்டு
தன் செங்கோல் சிலநாள் செலீஇக் கழிந்த. பார் அரசு ஒத்து
மறைந்தது ஞாயிறு’ - நாலா. திருவிருத்.80 75
