மிதிலைக் காட்சிப் படலம் - 647

bookmark

சதானந்த முனிவர் வருதல்

சதானந்த முனிவர் வந்து முகமன் உரைத்தல்
 
647.

வைகும் அவ் வழி. மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென. தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான்.*
 
தீது    அறு  -   குற்றம்    இல்லாத;   மொய்கொள்  வீரன் 
- வலிமையுள்ள  வீரனான  இராமனது;  முளரி  அம்   தாளினால்
- செந்தாமரை போலும்  திருவடித்  துகளால்;  மெய்கொள்  மங்கை
- பழைய உண்மை வடிவம் அடைந்த  அகலிகை; அருள்-பெற்றருளிய;
முனி - சதானந்த முனிவன்; வைகும் அவ்வழி - அவர்கள்   தங்கிய
மாளிகையிடத்தில்; மாதவம் யாவும் - பெருந்தவங்கள் எல்லாம்;  ஓர்
செய்கை கொண்டு - சீலமாகிய ஓர் உருவம் கொண்டு; நடந்து  என
- நடந்து வந்தது போல; மேவினான் - வந்தான்.

கௌதம    முனிவனுக்கும்  அகலிகைக்கும் பிறந்தவன் சதானந்த
முனிவன்.  அவன் விசுவாமித்திரன்  முதலியோர் வருகையை யறிந்து
அவர்கள்  தங்கிய  மாளிகைக்குச் சென்றான். இவன் சனக அரசனது
புரோகிதன். செய்கை - சீலம். ஒழுக்கம்.                      84