மிதிலைக் காட்சிப் படலம் - 650

bookmark

விசுவாமித்திரன் கூறுதல்

விசுவாமித்திரன் இராமனது பெருமை பேசுதல்
 
650.

பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி. நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்:*
 
தண்     பூச் சேக்கை- குளிர்ந்த தாமரை  ஆசனத்தையுடைய;
புனிதனையே -  தூய  குணமுள்ள  பிரமனை;  பொரு  ஏய்ந்த -
ஒத்துள்ளவனும்; கேண்மை  -  எல்லரிடத்திலும் நட்புடையவனுமான;
சதானந்தன்  என்று   உரை  -  சதானந்தன்  என்று  சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற; வாய்ந்த மா தவன் - பெருமுனிவனது; மாமுகம்
நோக்கி  -   சிறந்த திருமுகத்தைப் பார்த்து;  நூல் தோய்ந்த -
கலைகளிலே ஆழ்ந்த; சிந்தையின் கௌசிகன் -   மனத்தையுடைய
விசுவாமித்திரன்;  சொல்லுவான்  -   (பின்   வருமாறு)    சொல்ல
முற்படுவான்.   

முனிவனுக்குப்     பிரமன்  உவமை.  1.  வேதம்  ஓதுவதில்  2.
நல்லொழுக்கத்தில்.  3.  பெருந்தவமுடைமையில்.  4.  பிராமணர்க்குத்
தலைம    பூணுவதில்.    சதானந்தன்:   மிகுதியான   ஆனந்தத்தை
உடையவன்.  நூல்  தோய்ந்த  சிந்தை:  அனைத்துக்  கலைகளையும்
முழுவதும் உணர்ந்த மனம்.                                 87