மிதிலைக் காட்சிப் படலம் - 653

bookmark

சதானந்தர் இராமபிரானை நோக்கி விசுவாமித்திரர்
வரலாறு கூறுதல்

இராமனுக்குச் சதானந்தர் உரைத்த விசுவாமித்திரர் வரலாறு.
 
653.

எள் இல் பூவையும். இந்திர நீலமும்.
அள்ளல் வேலையும். அம்புத சாலமும்.
விள்ளும் வீயுடைப் பானலும். மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே.*
 
எள்  இல் பூவையும் - பழிப்பதற்கு இடமில்லாத காயாமலரையும்;
இந்திர   நீலமும் -  இந்திர  நீல   இரத்தினத்தையும்;   அள்ளல்
வேலையும்  -  சேறுள்ள  கடலையும்;  அம்புத சாலமும் -  மேகக்
கூட்டத்தையும்; விள்ளும் வீ உடை - மலர்ந்த  பூக்களைக் கொண்ட;
பானலும் - நீலோற்பலத்தையும்; மேவும் - உவமையாகப் பொருந்திய;
மெய் - திருமேனியுடைய;  வள்ளல்தன்னை - இராமனது; மதிமுகம்
நோக்கி - சந்திரன் போன்ற திருமுகத்தைப் பார்த்து.            90