மிதிலைக் காட்சிப் படலம் - 654

bookmark

விசுவாமித்திரன் வரலாறு (654-700)

அரசாளுகை

விசுவாமித்திரன் அரசனாய் ஆண்டமை
 
654.

‘நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென். கேள்; இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான்.
 
நறுமலர்த் தொடை- மணமுள்ள மலர்களால்  ஆகிய  மாலையை
அணிந்த; நாயக  -  தலைவனே!  நான்  உனக்கு  -  உனக்கு நான்;
அறிவுறுத்துவென் -  (ஒரு  செய்தியை)  தெரிவிக்கிறேன்; கேள் -
(அதனை)  கேட்பாயாக!;    இவ்   அருந்தவன்   -இந்த   அரிய
தவமுனிவனான   கௌசிகன்;  புவிக்கு  இறையென   -  (முதலில்)
நிலவுலகத்திற்கு  ஓர் அரசனாகி;  ஈறு  இல் - எல்லையில்லாத; பல்
ஆண்டு எலாம் - பல ஆண்டுகள் அளவும்; முறையினின் புரந்து -
அரச  நீதிப்படி பாதுகாத்து; அருள்  முற்றினான்  -  (உயிர்களிடம்)
கருணை நிரம்பி இருந்தான்.                                 91