மிதிலைக் காட்சிப் படலம் - 657

bookmark

காமதேனுவின் விருந்துபசாரத்தைக் கோசிகராசன்
சேனையோடும் பெறுதல்

657.

‘’அறு சுவைத்து ஆய உண்டி.
   அரச! நின் அனிகத்தோடும்
பெறுக!’’ என அளித்து. வேந்தோடு
   யாவரும் துய்த்த பின்றை.
நறு மலர்த் தாரும் வாசக்
   கலவையும் நல்கலோடும்.
உறு துயர் தணிந்து. மன்னன்
   உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான்.
 
(வசிட்டன் கோசிகனை நோக்கி) அரச- மன்னவ!;  அறு சுவைத்து
ஆய உண்டி  -   அறுசுவைகளோடு  கூடிய இந்த உணவுகளை; நின்
அனிகத்தோடும்  - நும்சேனகைளுடன்; பெறுக - பெற்று உண்பீராக;
என  -   என்று  சொல்லி;  அளித்து  -  (காமதேனு  சுரந்தவற்றை
யெல்லாம்) அருளொடு கொடுத்து; வேந்தோடு யாவரும் - கோசிகனும்
படையினரும்; துய்த்த பின்றை - உண்ட பின்னர்; நறுமலர்த் தாரும்
-  நறு  மணமுள்ள பூமாலைகளையும்; வாசக் கலவையும் - மணமிக்க
கலவைச்  சந்தனமும்;  நல்கலோடும்  -  யாவர்க்கும் அளித்து உதவ;
மன்னன்  -  இந்த  விசுவாமித்திரன்;  உறுதுயர்  தணிந்து -  தாம்
அடைந்திருந்த   களைப்புத்    தீர்ந்தபின்;   உய்த்து    உணர்ந்து
- ஆராய்ந்து உணர்ந்தவராய்; உரைக்கல் உற்றான்  -   (வசிட்டனை
நோக்கி ஒரு வார்த்தை) சொல்லத் தொடங்கினான்.   

அறுசுவை:    உப்பு. புளிப்பு. துவர்ப்பு. தித்திப்பு. கார்ப்பு. கைப்பு
என்பன. உறுதுயர்; வழிநடையாலும். வேட்டைத் தொழிலாலும் நேர்ந்த
இளைப்பு.                                               94