மிதிலைக் காட்சிப் படலம் - 658
கோசிகன் சுரபியைத் தருக என, வசிட்டன்
கூறுதல் (658-659)
சுரபியை அரசன் விரும்புதலும் முனிவர் விடையும்
658.
‘’மாதவ! எழுந்திலாய். நீ;
வயப்புடைப் படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக் கோ
உதவிய கொள்கைதன்னால்.
தீது அறு குணத்தால் மிக்க
செழு மறை தெரிந்த நூலோர்.
‘மே தகு பொருள்கள் யாவும்
வேந்தருக்கு’ என்கைதன்னால்.
மாதவ - பெருந்தவ முனிவரே!; நீ எழுந்திலாய் - நீவிர் (உமது
இருப்பிடத்தை விட்டு) எழுந்தீருமில்லை; (இப்படி இருக்க) இக்கோ
-இந்தத் தெய்வப் பசு; கோது அறும் அமுதம் - குற்றமற்ற நல்ல
உணவுகளை; வயப் புடை - வெற்றிதரும்; படை
கட்கு எல்லாம் - சேனைகள் எல்லாவற்றிற்கும்; உதவிய - கொடுத்து
உதவிய; கொள்கை தன்னால் - சிறப்பு உடைமையாலும்; தீது அறு
குணத்தால் - குறைவில்லாத நற்குணங்களால்; மிக்க செழுமறை
- மிக்கவர்களும் சிறந்த வேதங்கள் முதலிய; தெரிந்த நூலோர்
- கலைகளை அறிந்தவர்களும் ஆன பெரியோர்கள்; மேதகு
பொருள்கள் - மேன்மையுள்ள பொருள்கள்; யாவும் வேந்தருக்கு -
எல்லாம் அரசருக்கே; என்கை தன்னால் - உரியன என்று
சொல்லுவதனாலும்.
‘சிறந்த பொருளைக் கொள்வதற்கு உரியவன் அரசன்’ மறைக்குச்
செழுமை. அறம் பொருள். இன்பம். வீடு என்னும் நாற்பயன்களையும்
அளிக்கும் வன்மை. 95
